தலைவாசல் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்

தலைவாசல் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-05 22:59 GMT
தலைவாசல்,

தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையானது குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், கடையில் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுவதாகவும், எனவே, அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் தரப்பில் புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதனிடையே, நேற்று முன்தினம் தலைவாசல் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் என்பவர், காட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், டாஸ்மாக் கடையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், எனவே, அந்த கடையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அங்கு வந்த தலைவாசல் போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் அந்த டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படவில்லை.

இந்தநிலையில், காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று நண்பகல் 12 மணியளவில் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், புறவழிச்சாலையில் உள்ள தற்காலிக இறைச்சி கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தலைவாசல் மற்றும் ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த முற்றுகை போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது.

அதன்பிறகு இன்னும் ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்