வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேகரிப்பு காரைக்குடி வியாபாரியின் ஆர்வம்

வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை காரைக்குடியை சேர்ந்தவர் சேகரித்துள்ளார்.

Update: 2019-02-05 23:00 GMT
காரைக்குடி,

காரைக்குடி ராமசாமி செட்டியார் தெருவில் வசிப்பவர் எஸ்.ஆர்.மெய்யர் (வயது 49). இவர் கல்லுக்கட்டி வடக்குப் பகுதியில் கெடிகாரம் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். பல்வேறு நாடுகளின் நாணயங்கள் ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை சேகரிப்பது இவரது பழக்கமும் பொழுதுபோக்கும் ஆகும்.

இந்தியா சுதந்திரமடைந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்று வெள்ளி விழா கொண்டாடிய நேரத்தில் அரசு 10 ரூபாய் வெள்ளி நாணயத்தை வெளியிட்டது. இதனை மெய்யர் 1990-ம் ஆண்டில் ரூ. 800 விலை கொடுத்து வாங்கி உள்ளார். மெய்யரின் முதல் சேகரிப்பு இதுவே. தற்போது இவரிடம் பல்வேறு நாடுகளின் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் பல ஆயிரக்கணக்கில் உள்ளது. முதலில் பொழுதுபோக்காக இதனை ஆரம்பித்தாலும் பின்னர் இதுவே இவருக்கு பிரதான வேலையாக போய்விட்டது.

பழமையான நாணயங்கள் ரூபாய் நோட்டுகள் எங்கேயாவது இருப்பது தெரியவந்தால் கடன் வாங்கியாவது என்ன விலை கொடுத்தாவது அதனை வாங்கி விடுவது இவரது வழக்கம். இவரது நாணய சேகரிப்பு பழக்கத்தை அறிந்த இவரது நண்பர்கள், உறவினர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெறும் நாணயங்களை இவருக்கு கொடுத்து இவரை உற்சாகப்படுத்துவதும் உண்டு. இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகள், பர்மாவின் கியாட், சிங்கப்பூரின் டாலர், இங்கிலாந்தின் பவுண்ட், மலேசியாவின் ரிங்கிட், சுவீடனின் குரோனா, அமெரிக்காவின் டாலர், சவுதி கத்தாரின் ரியால், கம்போடியாவின் ரியல், டென்மார்க்கின் க்ரோன், கொரியாவின் வோன், ஜப்பானின் யென், பிலிப்பைன்சின் பிசோ, ஐஸ்லாந்தின் யூரோ, நேபாளின் நேப்பாளி ரூபி, சிரியாவின் சிரியா பவுண்ட் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் இவர் சேகரித்த கைவசம் வைத்துள்ளார்.

இவரிடம் அக்காலத்தின் ஓட்டைக்காசு தம்பிடி அணா, ஒரு காசு, இரண்டு காசு, மூன்று காசு ஆகியவை மட்டுமின்றி தங்கம், வெள்ளி பித்தளை, காப்பர் மற்றும் பல்வேறு உலோகங்களில் நாணயங்கள் பல்வேறு அளவுகளில் இவரிடம் உள்ளது. இவரது சேகரிப்புகளில் 1304 -ம் ஆண்டு வெளியான புருனே சுல்தான் வெளியிட்ட நாணயத்தின் இன்றைய மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. புதுக்கோட்டை மகாராஜா வெளியிட்ட நாணயங்கள், 1818-ல் அமெரிக்காவில் வெளியான டாலர் ஆகியவை இவரது சேகரிப்பில் அரிதானதாகும். அந்த அமெரிக்க டாலரின் மதிப்பு இன்றளவில் பல ஆயிரம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்