விருதுநகரில் ஆட்டோக்கள் உரிய அனுமதியுடன் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் வட்டார போக்குவரத்து துறைக்கு கோரிக்கை

விருதுநகரில் இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிய அனுமதியுடன் செயல்படுவதை உறுதி செய்ய வட்டார போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-02-05 22:45 GMT

விருதுநகர்,

விருதுநகரை பொறுத்தமட்டில் சமீப காலமாக ஆட்டோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு தினசரி 50–க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்துசெல்லும் நிலையில் ரெயில் நிலையத்திற்கு போதிய பஸ் வசதி செய்யப்படாத நிலையில் ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் ஆட்டோக்களிலேயே பயணம் செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதே போன்று புறநகர் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாகிவிட்ட நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஆட்டோக்களிலேயே பள்ளிகளுக்கு வந்துசெல்லும் நிலை அதிகரித்துள்ளது. ஆட்டோக்களில் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்துவருகிறது என்பது வரவேற்க கூடியதுதான் ஆனால் நகர் பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிய அனுமதி பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யப்படாத நிலை நீடிக்கிறது.

பள்ளி நேரங்களில் ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றிச்செல்லும் நிலை இருந்தாலும் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது ஏன் என்று தெரியவில்லை. அரசு உத்தரவுப்படி சாலை பாதுகாப்பு வார விழாக்களை ஏற்பாடு செய்துள்ள வட்டார போக்குவரத்துதுறையினர் பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய அனுமதி பெற்றுள்ளனவா என்பதை கண்காணிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் முறைகேடுகள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. உரிய அனுமதி பெறாத ஆட்டோக்களை போலீசார் ஆய்வின் போது கண்டுபிடித்தால் அதுபற்றி வட்டார போக்குவரத்து துறைக்கு தெரிவிக்காமலும் உரிய நடவடிக்கை எடுக்காமலும் முறைகேடான நடைமுறைகளை கடைபிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஆட்டோக்கள் உரிய அனுமதி பெறுவது முறையாக கண்டுபிடிக்கப்படுவதில்லை.

எனவே வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் விருதுநகரில் இயக்கப்படும் ஆட்டோக்கள் முறையாக அனுமதி பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு ஆட்டோக்களில் பயணம் செய்யும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆட்டோக்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்