கோர்ட்டு ஊழியர்களிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி - 2 பேர் மீது வழக்குப்பதிவு

கோர்ட்டு ஊழியர்களிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-02-05 22:45 GMT
வேலூர்,

வேலூர் அருகே நிலம் வாங்கி தருவதாக கூறி கோர்ட்டு ஊழியர்களிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி, கோர்ட்டு ஊழியர். இவரும், வேலூர் கோர்ட்டில் பணிபுரியும் தட்டச்சர்கள், கோர்ட்டு அலுவலக உதவியாளர்கள் என 16 பேர் ஒரே இடத்தில் நிலம் வாங்க முடிவு செய்தனர். இதற்காக, அவர்கள் கார்ணாம்பட்டு பகுதி 1-ல் வசிக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுப்பிரமணி, அவருடைய மகன் ராஜ்கமல் ஆகியோரை அணுகினர். அவர்கள் இருவரும் சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரத்தில் 1 ஏக்கர் 14 சென்ட் இருப்பதாகவும், ரூ.16 லட்சம் கொடுத்தால் அதனை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு கோர்ட்டு ஊழியர்கள் ரூ.16 லட்சத்தை சுப்பிரமணியிடம் கொடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து சில நாட்களில் சுப்பிரமணி நிலத்துக்கு ஒப்புதல் பெற மேலும் ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் சில மாதங்களாகியும் நிலம் வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கோர்ட்டு ஊழியர்கள் விசாரித்தபோது, அந்த நிலத்தை சுப்பிரமணி, ஏற்கனவே மும்பையை சேர்ந்த தனியார் தொழிற்சாலைக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள், சுப்பிரமணியிடம் கொடுத்த ரூ.20 லட்சத்தைத் திரும்ப கேட்டனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

நிலம் வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட சுப்பிரமணி, ராஜ்கமல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோர்ட்டு ஊழியர்கள் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாரிடம் புகார் அளித்தனர். அவரின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுப்பிரமணி, ராஜ்கமல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்