வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தையால் பரபரப்பு வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
நீலகிரியில் வீட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே வீட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராயன் (வயது 70), விவசாயி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியூர் சென்றார். இந்த நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு கணவன், மனைவி இருவரும் வீடு திரும்பினர். முன்பக்க கதவை திறந்தபோது வீட்டுக்குள் இருந்து ஏதோ ஒருவிதமான சத்தம் கேட்டது.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ராயன் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தார். அப்போது சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் பதுங்கி இருந்தது. இதனால் பீதி அடைந்த ராயன் மற்றும் அவரது மனைவி பயத்தில் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை இழுத்து மூடினர். இதனால் சிறுத்தை வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து சென்றனர். சிறுத்தை பதுங்கி இருந்த வீட்டின் அருகே பொதுமக்கள் யாரும் செல்லாதபடி வனத்துறையினரும், போலீசாரும் பார்த்துக்கொண்டனர். பின்னர் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
சிறுத்தைக்கு 3 வயது இருக்கும். அந்த வீட்டின் பின்பக்க சுவரில் சிறியதாக துளை இருந்துள்ளது. அதன் வழியாகத்தான் அந்த சிறுத்தை வீட்டிற்குள் நுழைந்தது. அந்த சிறுத்தையை பிடிக்க வீட்டின் வாசலில் கூண்டு வைக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் அந்த வீட்டின் கதவை திறந்தவுடன் சிறுத்தை வெளியே ஓடிவந்தபோது கூண்டில் வசமாக சிக்கிக்கொண்டது. அந்த சிறுத்தை வனப்பகுதியில் பத்திரமாக விடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.