சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் கூடுதல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. எனவே கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
சிவகிரி,
சிவகிரி தலையநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். சன்ன ரக நெல் கிலோ ஒன்று 18 ரூபாய் 40 காசுக்கும், பொது ரக நெல் ரூ.18–க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நெல் அதிக அளவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டதால் கூடுதலாக மேலும் ஒரு நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் தலா 32 டன் என மொத்தம் 64 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினமும் 64 டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யமுடியும். அதற்கு அதிகமாக கொண்டு வரப்படும் நெல், விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் மலைபோல் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு தினமும் 64 டன்னுக்கும் மேலாக நெல்லை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். அவ்வாறு கொண்டுவரப்படும் நெல்லை நாங்கள் விற்பனைக்கூட வளாகத்தில் ஆங்காங்கே மலைபோல் குவியல் குவியலாக குவித்து வைத்து உள்ளோம். தற்போது இரவில் பனியும், பகலில் வெயிலும் அடிக்கிறது.
இதனால் பனியில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் நெல்லின் தரம் குறைந்து போவதுடன், கெட்டுப்போகவும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பனியின் காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்தால் விலை குறைந்துவிடும். மேலும் மழை பெய்தால் நெல் வீணாகிவிடும். எனவே கூடுதலாக 2 கொள்முதல் நிலையங்கள் திறந்து 64 டன் நெல் கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.