போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ, வேன் டிரைவர்கள் வேலைநிறுத்தம்
கால்டாக்சி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்டோ, வேன் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
காஞ்சீபுரம் அருகே கால் டாக்சி டிரைவர் ராஜேஷ் என்பவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் தன்னை போக்குவரத்து போலீசார் திட்டியதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அதேபோல் தமிழகம் முழுவதும் வாடகை கார் ஓட்டும் டிரைவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு வருகிறார்கள் எனவே இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கார், வேன், ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி விழுப்புரத்திலும் வாடகை கார், ஆட்டோ, வேன் ஓட்டுபவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, விழுப்புரம் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ, கார் மற்றும் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பழைய பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதேபோல் தியாகதுருகத்தில் நேரு கார் ஓட்டுநர்கள் சங்கம், பகவத்சிங் ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்சங்கம், அம்பேத்கர் டெம்போ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அண்ணா மினி டெம்போ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும் வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னசேலத்திலும் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.