ஊட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியல் கழகம் அமைக்க ஆய்வு - நார்வே பேராசிரியர் பேட்டி

ஊட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியல் கழகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று நார்வே சுற்றுச்சூழல் பேராசிரியர் ஜான் சம்சீத் ஊட்டியில் பேட்டி அளித்தார்.

Update: 2019-02-05 22:30 GMT
ஊட்டி,

நார்வே நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியர் ஜான் சம்சீத், சீனாவின் சுற்றுச்சூழல் மற்றும் பூமியின் முன்னாள் ஆராய்ச்சியாளர் நடராஜன் ஈஸ்வரன் ஆகியோர் நேற்று ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரிக்கு வருகை தந்தனர். அங்கு நீலகிரி மாவட்டத்தில் அரிய வகை மருத்துவ மூலிகை மையத்தை பார்வையிட்டனர். அதன் பின்னர் சுற்றுச்சூழல் பேராசிரியர் ஜான் சம்சீத் நிருபர்களிடம் கூறியதாவது:-

நார்வே நாட்டில் இயங்கி வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியல் கழகம் இந்தியாவில் தனது கிளையை அமைக்கும் பொருட்டு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ள ஊட்டி, மைசூரு மற்றும் இதர பகுதிகளை சென்று பார்வையிட உள்ளது.

மலைப்பிரதேசமான ஊட்டி அருகே எமரால்டு பகுதியில் மத்திய அரசின் மூலிகை பண்ணை இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு வகையான மூலிகை மற்றும் தாவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பார்மசி கல்லூரியில் மூலிகை குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் ஊட்டி அல்லது மைசூரு பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியல் கழகம் அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மூலிகை ஆராய்ச்சி மையம் டெல்லியில் இயங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளையொட்டி 6 வகையான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருவதால், அவர்களது மூலிகை பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்க முடியும் என்பதை நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து ஆராய்ச்சியாளர் நடராஜன் ஈஸ்வரன் கூறும்போது, இந்தியாவை பயமுறுத்தும் வகையில் டெல்லியில் மாசு அதிகமாக காணப்படுகிறது. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மாசு இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்தால், சுற்றுச்சூழல் பாதிக்காமல் பாதுகாக்க முடியும் என்றார்.

பேட்டியின் போது சர்வதேச ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜேம்ஸ், கல்லூரி முதல்வர் தனபால், ஊட்டி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்