தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கியிருந்த வெளியாட்கள் வெளியேற்றப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கியிருந்த வெளியாட்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதிரடி சோதனை
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் படுத்து உறங்குவதாகவும், நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து பணம், செல்போனை மர்மநபர்கள் திருடி சென்று விடுவதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, தென்பாகம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், வேலாயுதம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர்.
வெளியேற்றம்
அப்போது, அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏராளமானவர்கள் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். இதில் நோயாளிகளின் உறவினர்களை தவிர வெளியாட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது இதுபோன்று சோதனைகள் நடத்தப்படும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.