கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய வெளிமாநில படகுகள் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி கடல் பகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்த 6 விசைப்படகுகள் கரை ஒதுங்கியது. இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-04 23:00 GMT
கன்னியாகுமரி,

கர்நாடக மாநிலம் மல்பே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 1-ந் தேதி அன்று 6 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. இதில் ஒரு விசைப்படகு குமரி மாவட்டம் ஆழிக்கால் பகுதியை சேர்ந்த பெலிக்ஸ் ராபர்ட் என்பவருக்கு சொந்தமானது. 6 விசைப்படகுகளும் கர்நாடக கடலோர பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது, காற்றின் வேகம் அதிகமானது. இதன் காரணமாக 6 விசைப்படகுகளும் காற்றின் வேகத்திற்கு இழுத்து செல்லப்பட்டு கன்னியாகுமரி கடல் பகுதியினுள் நுழைந்தது. விசைப்படகுகளை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் கொண்டு செல்ல மீனவர் திட்டமிட்டனர். ஆனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் வெளிமாநில படகுகளுக்கு அனுமதி கிடையாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.

அதிகாரி விசாரணை

இதற்கிடையே பெலிக்ஸ் ராபர்டின் விசைப்படகு ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், நீலமணி ஆகியோர் விசாரணை நடத்தினர். மற்ற 5 விசைப்படகுகளும் கடலோரத்தில் தரைதட்டிய நிலையில் நிற்கிறது.

மேலும் இதுதொடர்பாக மீன்வளத்துறை ஆய்வாளர் விபின்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். வெளிமாநில படகுகள் கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்