கள்ளிமந்தயத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கள்ளிமந்தயத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சத்திரப்பட்டி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கள்ளிமந்தயத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் கனகு தலைமை தாங்கி பேசினார். விவசாயி சண்முகவேல் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் மதுசூதனன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திண்டுக்கல்லை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், 2016-ம் ஆண்டு பயிர்காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு அதற்கான காப்பீட்டுத்தொகையை உடனடியாக அவர்களின் வங்கிகணக்கில் செலுத்த வேண்டும் என்றார். மேலும் 2018-19-ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், சின்னதுரை, வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.