ஜங்ஷன் மேம்பாலத்துக்கு தேவையான நிலத்தை பெற அனைத்து கோப்புகளும் ராணுவ அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டது அமைச்சர் தகவல்

திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்துக்கு தேவையான நிலத்தை பெறுவதற்கு அனைத்து கோப்புகளும் ராணுவ அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது என்று சாலை பாதுகாப்பு வாரவிழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

Update: 2019-02-04 23:00 GMT
திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி முன்னிலை வகித்தார்.

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி 2 பஸ்களில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தும், மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பேசினார்கள்.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ‘திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்துக்கு தேவையான நிலத்தை விரைவில் தருவதற்கு அனுமதி அளிப்பேன் என மத்திய ராணுவ மந்திரி உறுதி அளித்து இருந்தார். இந்த நிலத்தை பெறுவதற்கு தேவையான அனைத்து கோப்புகளும் ராணுவ அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எனவே ராணுவ இடம் விரைவில் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

விழாவில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன், துணை போக்குவரத்து ஆணையர் உமா சக்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பொது மேலாளர் குணசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, அனிதா, நெடுஞ்செழியபாண்டியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்று தொடங்கிய சாலை பாதுகாப்பு வாரவிழா வருகிற 10-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்