வள்ளியூரில் திருமண மண்டப சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி - பராமரிப்பு பணியின்போது பரிதாபம்

வள்ளியூரில் பராமரிப்பு பணியின்போது திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-04 22:00 GMT
வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊற்றடி மேலத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 46), கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி கவிதா (40). கட்டிட தொழிலாளி.

வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நேற்று கட்டிட பராமரிப்பு பணி நடந்தது. இந்த வேலைக்கு கவிதா சென்றார். திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் அருகே நிலத்துக்குள் இருந்த பழுதடைந்த குழாய்களை தோண்டி எடுப்பதற்காக, மண் அள்ளும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து கவிதா மீது விழுந்தது. இதில் இடுபாடுகளுக்குள் சிக்கிய அவர் உயிருக்கு போராடினார்.

இதுபற்றி தகவல் அறிந்த வள்ளியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரதீப்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் இடிபாடுகளை அகற்றி கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கவிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த கவிதாவுக்கு சபரி பாக்யஸ்ரீ (9) என்ற மகளும், இசை சுபாகரன் (6) என்ற மகனும் உள்ளனர். திருமண மண்டப சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்