ரூ.10 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

ரூ.10 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2019-02-04 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை சராசரி அளவை விட 18 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. ஆனாலும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் குடிநீர் பற்றாக்குறை இருக்காது.

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்கு தினமும் 300 கன அடி தண்ணீர் திறக்க வேண்டி உள்ளது. இவ்வாறு திறந்தால் ஜூன் மாதம் வரை எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பது கணக்கிடப்பட்டு, அந்த அளவுக்கு தண்ணீர் அணைகளில் இருப்பு வைக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.அதே நேரத்தில் குடிநீர் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் பகுதிகளும் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு ஆழ்துளை கிணறுகளை தூர்வாருதல், புதிய கிணறுகள் அமைத்தல், குழாய்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் மொத்தம் ரூ.10 கோடி செலவில் நடந்து வருகின்றன. இந்த பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை நிறுவனங்கள் மூலம் நீர்வழி புறம்போக்கு மற்றும் பட்டா இடங்களில் மின்கம்பங்கள் நடப்படுகின்றன. புறம்போக்கு இடங்களில் நடப்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன. அதே போன்று பட்டா நிலங்களில் அனுமதி இல்லாமல் மின்கம்பம் நட்டினால் போலீசில் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் அனுமதியின்றி நடப்பட்ட 61 மின்கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில் ஆலையில் இருந்து ஜிப்சம், தாமிரதாது தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்