கோபர் ரெயில்நிலையம் அருகே ரெயிலில் அடிபட்டு சிறுவன் உள்பட 3 பேர் பலி
கோபர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்த போது 2 வயது சிறுவன் உள்பட 3 பேர் ரெயிலில் அடிபட்டு பலியானார்கள்.;
தானே,
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கோபர் ரெயில் நிலையத்தில் நேற்று கல்யாணில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி ஸ்லோ வழித்தடத்தில் மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. கோபர் கிழக்கு பகுதியில் 3 பேர் 2 வயது சிறுவனுடன் ஓடி வந்தனர். அவர்கள் திடீரென அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது விரைவு வழித்தடத்தில் வந்த ரெயில், அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த டோம்பிவிலி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் பலியானவர்கள் கோபரை சேர்ந்த சுனிதா பாங்காலே (வயது62), பிரித்தி ரானே (26), ரைஸ் ரானே (2) என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்தது பாஸ்கர் சந்து (65) என்பது தெரியவந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.