தொப்பையை குறைக்க போலீசாருக்கு பயிற்சி முகாம் மும்பையில் தொடங்கியது

தொப்பையை குறைக்க போலீசாருக்கு 3 வேளை உணவுடன் மும்பையில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Update: 2019-02-03 22:15 GMT
மும்பை,

போலீசார் உடல் பருமனாக தொப்பையுடன் வலம் வருவது அந்த துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் குறைக்கிறது.

சினிமாக்களிலும் உடல் பருமனாக உள்ள போலீசாரை குறிவைத்து கேலி செய்வது போன்ற காட்சிகள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன. இதுதவிர உடல் பருமன் போலீசாரின் உடல்நலனில் பாதிப்பையும், பணிகளிலும் தொய்வையும் ஏற்படுத்துகிறது.

இந்தநிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மும்பையில் 8 சதவீதம் போலீசார் அதிக உடல் எடையுடன் இருப்பது தெரியவந்தது.

எனவே மும்பை போலீசார் உடல் பருமனாக உள்ள போலீசாரின் உடல் எடையை குறைக்க புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளனர்.

இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 150 போலீசாருக்கு நைகாவ் போலீஸ் மைதானத்தில் ஒரு மாதத்திற்கு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

முகாமில் போலீசார் கலந்து கொள்ள வசதியாக ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமனை குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசார் தினமும் காலை 7 மணிக்கு முகாமுக்கு சென்றுவிட வேண்டும். அங்கு அவர்களுக்கு நாள் முழுவதும் உடற்பயிற்சி, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர போலீசாருக்கு 3 வேளை ஊட்டசத்து மிக்க உணவு வழங்கப்படுகிறது. இதில் போலீசாருக்கு வழங்க பிரத்யேக உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி காலை எழுந்தவுடன் அவர்கள் வீட்டில் வாழைப்பழம் அல்லது உலர் பழங்களை சாப்பிட வேண்டும். முகாமில் காலை 10 மணிக்கு காலை உணவாக துருவிய தேங்காயுடன் உப்மா, போகா, இட்லி, சட்னி, சாம்பார், சபுதானா கிச்சடி என இவற்றில் ஏதேனும் ஒரு உணவுடன் 2 அவித்த முட்டைகள் வழங்கப்படும்.

மதியம் 1 மணிக்கு பச்சை பட்டாணி, சுரைக்காய், பூசணிக்காய், காலிபிளவர் என ஏதேனும் ஒரு காய் மற்றும் ஒரு பயறு வகையுடன் சப்பாத்தி, சாதம் வழங்கப்படும்.

வாரத்திற்கு 3 நாட்கள் மதிய உணவுடன் இறைச்சி அல்லது மீன் வழங்கப்படும். பிற்பகல் 3.15 மணிக்கு புளி சர்பத், எலுமிச்சை சாறு வழங்கப்படும். 4.30 மணிக்கு ஏதாவது ஒரு பழம்.

மாலை 6 மணிக்கு பிறகு இரவு உணவாக முட்டை கறி, சாதம், சப்பாத்தி, கீரை பன்னீர், உருளை கிழங்கு கறி, கத்திரிக்காய் கறி என உணவு வழங்கப்படும். இதுதவிர வீட்டுக்கு சென்றவுடன் போலீசார் மஞ்சள் கலந்த பால் அல்லது சுக்கு சாப்பிட வேண்டும்.

முகாமில் போலீசார் கே.இ.எம். ஆஸ்பத்திரி டாக்டர் குழுவினர் கண்காணிக்கின்றனர். அவர்கள் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் போலீசாரை சோதித்து அவர்களுக்கு ஏற்ப உணவுப்பழக்கம் மற்றும் பயிற்சியில் மாற்றம் செய்கின்றனர். இதேபோல முகாமில் போலீசாருக்கு பிரபல பேச்சாளர்கள் மூலம் தன்னம்பிக்கை, எழுச்சி மிகு உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. இதுகுறித்து முகாமில் கலந்து கொண்ட போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், ‘‘எங்கள் மீது அக்கறை கொண்டு போலீஸ் துறை இதுபோன்ற முகாம் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முகாம் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்’’ என்றார்.

மேலும் போலீஸ் இணை கமிஷனர் தேவன் பாரதி கூறுகையில், ‘‘பரபரப்பான பணிச்சூழலால் போலீசார் தங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ள நேரம் கிடைப்பது இல்லை. எனவே அவர்களை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திருப்பும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் செய்திகள்