புதுவை மாநிலத்தில் சுய உதவிக்குழு பெண்கள் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கின்றனர் கவர்னர் கிரண்பெடி பெருமிதம்

புதுவை மாநிலத்தில் சுயஉதவிக்குழு பெண்கள் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கின்றனர் என்று கவர்னர் கிரண்பெடி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2019-02-03 23:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் போது தூய்மைக்கும், நிலத்தடிநீர் மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சிக்கு கவர்னர் கிரண்பெடி சென்றார். அங்குள்ள மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்களிடம், அரசு சார்பில் ஏதாவது உதவி கிடைக்கிறதா? என்று கேட்டார். பெண்கள் அவரிடம், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்று தொழில் செய்து வருவதாக கூறினர். உடனே கவர்னர் கிரண்பெடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் அவர்களிடம், முத்ரா திட்டத்தின் மூலம் பெற்ற கடனை முழுமையாக பயன்படுத்தி தங்களது வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும். பெண்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

இந்த ஆய்வின்போது கவர்னர் மாளிகை அதிகாரிகள், திட்ட இயக்குனர் ரவிபிரகாஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி செலினா, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கிராமப்புற மக்களின் நன்மைக்காக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களின் மூலம் புதுவை மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை நேரடியாக பார்த்து உணர்ந்தேன். சுயஉதவிக்குழு பெண்கள் நல்ல சமூக அமைப்பை கொண்டுள்ளவர்கள். பொருளாதாரத்தில் சுயமாக உள்ளனர். நம்பிக்கையானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் உள்ளனர்.

வங்கிகளில் வழங்கப்படும் முத்ரா கடன் திட்டத்தின் மூலமும், தேசிய ஊரக வாழ்வாதார திட்டங்கள் மூலமும் கடன் பெற்று பால்பண்னை, ஆடு வளர்ப்பு, விவசாயம், வியாபாரம் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதித்து வருகின்றனர். தரமான கல்விபெற தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர். வங்கிகள் அவர்கள் கடன் பெற ஈடாக எதையும் பெற்றுக்கொள்ளாமல் வழங்கி வருகின்றன. நபார்டு மற்றும் புதுச்சேரி கிராமப்புற மேம்பாட்டு துறை அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து வருகின்றன.

பெண்கள் நடத்தி வரும் சுய உதவிக்குழு மற்றும் வியாபாரங்களின் வரவு–செலவு கணக்குகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வருகின்றனர். ஜனநாயக முறையில் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பி வருகின்றனர். அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தும் போது எவ்வாறு இணைந்து வேலை செய்வது, கீழ்நிலையில் உள்ளவர்களை உயர்த்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, நேர்மையுடன் பணியாற்றுவது, சுற்றுச்சூழலை மேம்படுத்துவது, ஆரோக்கியத்தை பராமரிப்பது ஆகியவை குறித்து உறுதிமொழி எடுத்து கொள்கின்றனர்.

அவர்களுடன் கலந்துரையாடும் போது பொது அறிவை வளர்த்து கொள்ளவும், யோகா செய்யவும் பரிந்துரைத்தேன். குடும்ப உறுப்பினர்களையும் ஈடுபடுத்த கேட்டுக்கொண்டேன். தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்