8 வழிச்சாலையை ஆதரிக்கும் கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் உழவர் இயக்க கூட்டத்தில் தீர்மானம்
8 வழிச்சாலையை ஆதரிக்கும் கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும் என உழவர் இயக்க அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள ராமலிங்கபுரத்தில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான மாவட்ட உழவர் இயக்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில செயலாளர் சந்திரமோகன், பா.ம.க. நிர்வாகி சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி பூபதி, ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி விமலன் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு பேசினர்.
வருகிற 21-ந் தேதி 53 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. இதில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் திரளாக பங்கேற்பது என்றும், விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.