உடுமலை அருகே சாலையில் பரவி கிடக்கும் மண்ணால் தொடரும் விபத்துகள்

உடுமலை அருகே சாலையில் பரவி கிடக்கும் மண்ணால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

Update: 2019-02-03 22:00 GMT

போடிபட்டி,

மடத்துக்குளத்திலுள்ள அமராவதி சர்க்கரை ஆலை பகுதியிலிருந்து மலையாண்டிக்கவுண்டனூர் வழியாக உடுமலை, குமரலிங்கம், அமராவதி போன்ற முக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலையில் தினசரி அதிக அளவில் வாகனப்போக்குவரத்து உள்ளது. சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் சர்க்கரை ஆலை, வடிப்பாலை ஆகியவற்றிலிருந்து உற்பத்தி பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்கள் இந்த சாலையில் அதிக அளவில் சென்று வருகின்றன.

மேலும் சாளரப்பட்டி, மருள்பட்டி, கிருஷ்ணபுரம், மடத்துக்குளம் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டி சரளைக்கற்கள் போட்டு கெட்டிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விரிவாக்கப்பணிகளுக்காக கொட்டப்படும் சரளைக்கற்கள் மற்றும் மண் பல இடங்களில் சாலையில் பரவி கிடக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து தொடர்ந்து விபத்துக்குள்ளாகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்திக்கும் நிலை உள்ளது.

எனவே விரிவாக்க பணிகளின் போது சாலையில் சிதறி உள்ள மண் மற்றும் கற்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்