திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் சாய்ந்து நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் சாய்ந்து நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-02-03 22:00 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 27 கொண்டைஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு மரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி தாளவாடி அடுத்து திம்பம் மலைப்பாதையில் உள்ள 26–வது கொண்டை ஊசி வளைவில் நேற்று காலை 10 மணி அளவில் வந்துகொண்டு இருந்தது.

அப்போது மரத்தின் பாரம் தாங்குமுடியாததால் திடீரென நடுரோட்டில் லாரி சாய்ந்தபடி நின்றுவிட்டது. மேலும் லாரி டிரைவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதனால் அந்த வழியாக வந்த பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் வரிசையாக அணிவகுத்து நின்றன. மேலும் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 சக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவந்தன. கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு சாய்ந்தபடி நின்ற லாரி சரிசெய்யப்பட்டது. மாலை 5 மணி அளவில் அந்த லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதன்பின்னர் மற்ற வாகனங்கள் செல்லத்தொடங்கின.

லாரி சாய்ந்தபடி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்