சைவ உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆணிப்படுக்கையில் 51 யோகாசனங்கள் செய்த இளம்பெண்

சைவ உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கல்பனா (வயது 25) என்பவர் ஆணிப்படுக்கையில் 51 யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2019-02-03 22:45 GMT
திருவண்ணாமலை, 

சைவ உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் சிறுமியர் வன்புணர்வை தடுக்கவும் திருவண்ணாமலையை சேர்ந்த யோகா பயிற்றுனர் கல்பனா (வயது 25) என்பவர் ஆணிப்படுக்கையில் 51 யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நடைபெற்றது. இதனை சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரம நிர்வாகி முத்துக்குமாரசாமி, சந்திரமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் கல்பனா ஆணிப்படுக்கையில் அமர்ந்தும், படுத்தும் பத்மாசனம், பருவதாசனம், பச்சி மோத்தாசனம், வக்ராசனம், சாந்தி ஆசனம் என பல்வேறு ஆசனங்கள் செய்தனர். இறுதியாக அவர் ஆணிப்படுக்கையின் மீது படுத்துக்கொண்டு சாந்தி ஆசனம் செய்தார். அப்போது அவரது வயிற்றின் மேல் சிறுவன் ஒருவன் அமர்ந்து பத்மாசனம் செய்தார். இதனை காணும்போது அது வியப்பில் ஆழ்த்தியது.

பின்னர் யோகாசனம் செய்த கல்பனாவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினர். முடிவில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேடிங் கழக நிர்வாகி யோகா சுரேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை திருவண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேடிங் கழகம் ஆகியவை இணைந்து செய்திருந்தது.

மேலும் செய்திகள்