வாணாபுரம் பகுதி ஏரிகளுக்கு இரைத்தேடி வரும் அரியவகை பறவைகள் சரணாலயம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வாணாபுரம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு அரியவகை பறவைகள் இரைத்தேடி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-02-03 23:00 GMT
வாணாபுரம், 

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் தண்ணீர் இருக்கும் காலங்களில் அதிகளவில் மீன்கள், பூச்சிகள் இருப்பதால் இங்கு இரைக்காக பறவைகள் வருவது வழக்கம்.

கடந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால் ஏரிகள் முழுவதும் வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது வாணாபுரம் வழியாக குங்கிலியநத்தம், சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, வெறையூர், தாங்கல், தலையாம்பள்ளம், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது.

வறண்டு கிடந்த ஏரிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வருவதால் அரிய வகை பறவைகள் இரைத்தேடி இங்கு வர தொடங்கியுள்ளது. கொளக்குடி பகுதியில் உள்ள ஏரிக்கு தண்ணீர் வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரிய மூக்கு நாரை, நீர்க்கோழி, தண்ணீர்தாரை, கொக்கு, கானாங்கோழி மற்றும் பல்வேறு வகையான பறவைகள் அதிகளவில் குவிந்துள்ளன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பறவைகளை பார்த்துவிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட ஏரிகளுக்கு தற்போது தண்ணீர் வருவதால் இங்கு பறவைகள் இரைக்காக முகாமிட்டுள்ளது.

இப்பகுதிகளில் அதிகளவில் பறவைகள் வருவதால் இங்கு பறவைகள் சரணாலயம் அமைத்து பல வகையான பறவைகள் மற்றும் அரிய வகை பறவைகளை பாதுகாக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்