கிழக்கு தாம்பரம் அருகே கால்டாக்சி டயர் பஞ்சராகி விபத்து; டிரைவர் பலி தாறுமாறாக ஓடி எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது

கிழக்கு தாம்பரம் அருகே டயர் பஞ்சரானதால் தாறுமாறாக ஓடிய கால்டாக்சி, எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் கால்டாக்சி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-03 22:15 GMT
தாம்பரம்,

சென்னை தேனாம்பேட்டை, திரு.வி.க. குடியிருப்பை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 41). கால்டாக்சி டிரைவரான இவர், நேற்று காலை வேளச்சேரியில் இருந்து பயணி ஒருவரை ஏற்றுவதற்காக காரில் தாம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலையில் கிழக்கு தாம்பரம் அருகே வந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, எதிர் திசையில் தாம்பரத்தில் இருந்து சேலையூர் நோக்கி சென்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த கால்டாக்சி டிரைவர் சுபாஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எதிரே வந்த ஆட்டோவை ஓட்டிவந்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த வடமலை (40) மற்றும் அதில் இருந்த பயணிகள் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்