வெளிநாட்டு தம்பதியை மிரட்டி பணம் பறிப்பு 2 போலி போலீஸ்காரர்கள் கைது
வெளிநாட்டு தம்பதியை மிரட்டி பணம் பறித்த ஈரான் நாட்டை சேர்ந்த போலி போலீஸ்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையை சுற்றிப்பார்க்க கடந்த மாதம் 19-ந் தேதி வெளிநாட்டை சேர்ந்த தம்பதி வந்தனர். இவர்கள் சம்பவத்தன்று டாக்சியில் விக்ரோலி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் டாக்சியை வழிமறித்தனர். அவர்கள் டிரைவரிடம் தாங்கள் போலீஸ்காரர்கள் என கூறி, டாக்சியில் சோதனை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் வெளிநாட்டு தம்பதி போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கூறி அவர்களை கைது செய்யப்போவதாக மிரட்டினர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 2 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை பறித்து சென்றனர்.
போலி போலீஸ்காரர்கள் கைது
இதனால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு தம்பதி சம்பவம் குறித்து விக்ரோலி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வெளிநாட்டு தம்பதியிடம் பணம் பறித்தது போலி போலீஸ்காரர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் விக்ரோலியில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது.
இதன்பேரில் அங்கு சென்ற போலீசார், ஓட்டலில் பதுங்கி இருந்த ஈரான் நாட்டை சேர்ந்த ஜோகரி பேமேன் அக்பர் (வயது30), ஹமீது அனிஅலி பிரோஜ் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.65 ஆயிரம், பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.