டெல்லி வீட்டில் ரூ.8½ கோடி சிக்கிய வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
டெல்லி வீட்டில் ரூ.8½ கோடி சிக்கிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார்.
ஹவாலா பணம்
இவருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.8½ கோடியை கைப்பற்றினார்கள். அது ஹவாலா பணம் என்பதும், காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களுக்கு கொடுக்க தன்னுடைய குடியிருப்பில் மந்திரி டி.கே.சிவக்குமார் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சட்டவிரோதமாக ரூ.8½ கோடியை பரிமாற்றம் செய்ய முயன்றதாக மந்திரி டி.ேக.சிவக்குமார், தொழில்அதிபர் சுனில்சர்மா, ஆஞ்சனேயா, ராஜேந்திரா, சச்சின் நாராயண் ஆகிய 5 பேர் மீதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்
ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி இருந்த மந்திரி டி.கே.சிவக்குமார் ரூ.8½ கோடிக்கு சரியான கணக்கு விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வழங்காமல் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.8½ கோடி சிக்கிய வழக்கில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேரும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. அதாவது டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் 5 பேரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதாக வாய்ப்பு
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மந்திரி டி.கே.சிவக்குமார் டெல்லியில் உள்ள கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், ‘எந்த விதமான நோட்டீஸ் வர வேண்டுமோ, அது வந்துள்ளது. இப்போது அதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை. தகுந்த நேரம் வரும்போது, இந்த விவகாரம் குறித்து பேசுகிறேன்,’ என்றார்.