கொடைக்கானல் அருகே விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி
கொடைக்கானல் அருகே விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகரில் நாளுக்குள் நாள் சீட்டுக்கட்டை அடுக்கி வைத்தாற்போல் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆனால் உரிய அனுமதியின்றி, விதிகளை மீறியும் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி ஐகோர்ட்டு உத்தரவுப்படி விதிமுறைகளை மீறி, கொடைக்கானல் பகுதியில் கட்டப்பட்ட 49 கட்டிடங்கள் முதற்கட்டமாக பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக 1,415 கட்டிடங்களை ‘சீல்’ வைக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த கட்டிங்களுக்கு ‘சீல்’ வைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கொடைக்கானல் நகருக்கு அருகே உள்ள வில்பட்டி ஊராட்சியிலும் அனுமதியின்றி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்து அதனையும் ‘சீல்’ வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் நேற்று வில்பட்டி ஊராட்சியில் உள்ள பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், கோவில்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் தலைமையில் 3 குழுவினர் தனித்தனியாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கணக்கீடு பணிகள் முடிந்த பின்னர் முதற்கட்டமாக கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். அதன்பிறகு கட்டிடங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார்.
இதற்கிடையே அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.