இருவேறு இடங்களில் சம்பவம்: மின்சார ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
சேத்துப்பட்டு மற்றும் சைதாப்பேட்டையில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 2 பேர் மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தனர்.
சென்னை,
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் செல்வமணி(வயது 28). இவர், நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு செல்வதற்காக சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த செல்வமணி, பரிதாபமாக இறந்தார். இதுபற்றி எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன்(43). லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே வாசுதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.