பெரம்பூரில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரம்பூரில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டன.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே திருவேங்கடம் சாலையில் பெரம்பூர் ரெயில்வே போலீஸ் குடியிருப்புக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்பிலான சுமார் 6,800 சதுரஅடி நிலம் உள்ளது. இந்த இடத்தை பெரம்பூரைச் சேர்ந்த தனிநபர்கள் 2 பேர் ஆக்கிரமித்து, பலருக்கு விற்பனை செய்து உள்ளதாகவும், தற்போது அந்த இடத்தில் ஓட்டல், டீ கடைகள் மற்றும் கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
ரெயில்வே இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை ரெயில்வே போலீசார் சார்பில் நோட்டீஸ் வழங்கியும் யாரும் காலி செய்யவில்லை.
இதையடுத்து ரெயில்வே சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ரெயில்வே இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட்டது.
இடித்து அகற்றம்
இதையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாத்ராஜகோபால், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி, இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் ஆகியோர் தலைமையில் நேற்று செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிகுமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ரெயில்வே இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
முதல்கட்டமாக 2,600 சதுர அடி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள். மீதம் உள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அதற்குள் ஆக்கிரமிப்பாளர்களே, கட்டிடங்களை இடித்து அகற்றிவிடவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் அந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்படும் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.