தடுப்பு சுவர் இல்லாததால் விபத்தை ஏற்படுத்தும் உப்பாற்று பாலம்
சிங்கம்புணரி அருகே உள்ள உப்பாற்று பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.மாம்பட்டி கிராமத்தின் வழியாக செல்கிறது உப்பாறு. இந்த ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலம் கட்டப்பட்டது. ஆனால் பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது இந்த பாலத்தின் வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
மேலும் இரவு நேரங்களில் இந்த பாலத்தில் விளக்கு வசதி இல்லாததால், பாலம் இருளில் மூழ்கி உள்ளது. அப்போது இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனத்திற்கு இடம் கொடுக்க பாலத்தில் ஒதுங்கும் வாகனங்கள், பல நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் இந்த பாலம் முத்தாண்டிபட்டி, எஸ்.மாம்பட்டி, தும்பைப்பட்டி மல்லாக்கோட்டை, ஏரியூர், அரளிக்கோட்டை வழியாக திருப்பத்தூர்–சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையை அடைய குறுக்கு சாலையாக உள்ளது.
மேலும் எஸ்.மாம்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள சின்ன சின்ன கிராமத்தினருக்கு இந்த பாலம் பெரும் வகையில் பயனுள்ளதாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற இந்த பாலம், தடுப்பு சுவர் இல்லாததால் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பகல் நேரங்களில் கூட வாகனங்கள் விபத்தில் சிக்கும் வகையில் உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்த வெளியாக இருக்கும் இந்த பாலம், பெரும் விபத்தை ஏற்படுத்தும் முன்பு விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். மேலும் சுற்றுப்புற கிராமத்தினர் பயணம் செய்ய பயனுள்ளதாக இந்த உப்பாற்று பாலத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.