அரசு அலுவலகங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்
அரசு அலுவலகங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
காரைக்குடி,
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் மாவட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஹைதர் அலி அம்பலம் தலைமை தாங்கினார். காரைக்குடி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் காரை பஷீர் முன்னிலை வகித்தார்.
செயலாளர் இணையத்துல்லா, பொருளாளர் பிலால், நகர இளைஞரணி அமைப்பாளர் அப்துல் ரஜாக் உள்பட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:– வருகிற 16–ந் தேதி மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு, மாவட்டத்தில் இருந்து 30–க்கும் மேற்பட்ட வாகனங்களில் பங்கேற்க வேண்டும்.
மாநில மாநாட்டிற்கான அழைப்பினை மாவட்டம் முழுவதும் உள்ள 163 பள்ளிவாசல்களுக்கும் நேரில் சென்று வழங்க வேண்டும். திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காரைக்குடி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமான சம்பை ஊற்றை சுற்றிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும்.
காரைக்குடி நகரில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக கண்காணித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏழை எளிய மக்களை லஞ்ச ஊழல் பேர்வழிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.