தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் பகுதியில் பறவைகளை கணக்கெடுக்க வனத்துறை ஏற்பாடு

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் பகுதியில் ஏராளமான பறவையினங்கள் வந்து குவிந்துள்ளன. இவற்றை கணக்கெடுக்க வனத்துறையினர் ஏற்பாடுசெய்து வருகின்றனர்.

Update: 2019-02-02 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடல் புறா, கடல் ஆலா, நீர்காகம், கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா பிளமிங்கோ, கடல் புறா, கடல் ஆலா உள்ளிட்ட பறவைகள் கோதண்டராமர் கோவில் பகுதிக்கு வந்துள்ளன. இவ்வாறு வரும் பறவைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

இதுபற்றி வனச்சரகர் கூறியதாவது:– தமிழகம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் கடல்புறா, கடல் ஆலா போன்ற பறவையினங்களை காண முடியும். தனுஷ்கோடியில் தான் இவை அதிகஅளவில் காணப்படுகின்றன. வருகிற 7,8 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, தேர்த்தங்கால், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் உள்ளிட்ட பறவைகள் சரணாலங்களில் வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

இதேபோல ராமேசுவரம் உள்ளிட்ட தீவு பகுதிகளை சுற்றிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் சுமார் 260 வகையான பறவைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்