அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர் பலி போலீசார் விசாரணை

நாகூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2019-02-02 22:15 GMT
நாகூர்,

நாகூரை அடுத்த வாழஓக்கூர் வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி. இவருடைய மகன் கார்த்தி (வயது26). இவர் தனியார் நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது முட்டம் முனீஸ்வரன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்தி உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து கார்த்தி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்