மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: பேராசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பேராசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;

Update: 2019-02-02 22:15 GMT
சேலம், 

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 33). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். இவருடைய மனைவி கவிதா(26), பி.எஸ்.சி., பி.எட். படித்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் சதீஷ்குமார் தான் பணியாற்றிய கல்லூரியில் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியை 2-வதாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது மனைவியிடம் கூறி உள்ளார். இதற்கு கவிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த கவிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில், தனது சாவுக்கு கணவர் தான் காரணம் என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ்குமார் மீது அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது மனைவியை தற்கொலைக்கு தூண்டிய சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்