துக்க வீட்டுக்கு சென்றபோது மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை துணிகர கொள்ளை வாழப்பாடி அருகே பரபரப்பு
வாழப்பாடி அருகே துக்க வீட்டுக்கு மூதாட்டி சென்ற போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் இந்திராணி (வயது 62). இவருடைய கணவர் திருமலை நாயகம். திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ராம்மோகன், ரஞ்சித் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களில் ராம்மோகன் பி.பார்ம் படித்து விட்டு துபாயில் வேலைபார்த்து வருகிறார். மற்றொரு மகன் ரஞ்சித் எம்.இ. படித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலையில் உள்ளார். கணவர் இறந்து விட்ட நிலையில், மகன்களும் வெளிநாடு மற்றும் கோவையில் வேலை செய்து வருவதால், இந்திராணி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு கொட்டவாடி ஊராட்சி பகுதியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.
பின்னர் அவர் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கிருந்த 4 பீரோக்களின் பூட்டை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து, இந்திராணி ஏத்தாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யமூர்த்தி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன்(ஏத்தாப்பூர்), செல்வராஜ்(வாழப்பாடி) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வீட்டில் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற கைரேகைகளை பதிவு செய்தனர்.
விசாரணையில் இந்திராணி, அடுத்த வாரம் அவருடைய உறவினர் ஒருவரின் திருமணம் நடக்க இருப்பதால், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வங்கி லாக்கரில் வைத்திருந்த நகைகளை வீட்டுக்கு சமீபத்தில் எடுத்து வந்து வைத்துள்ளார். இதையறிந்த மர்ம கும்பல், அவர் துக்க நிகழ்வில் பங்கேற்க சென்றதை நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்திராணியின் தங்கை, மருமகள் ஆகியோரின் நகைகளும் பீரோக்களில் இருந்ததாக அவர் போலீசில் தெரிவித்தார். கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு சுமார் ரூ.13½ லட்சம் ஆகும்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.