“மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது” நல்லகண்ணு பேட்டி
“மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது“ என்று இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 11.4.2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது உரிய அனுமதின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் தென்பாகம் போலீசார் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஆஜராக இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று காலையில் தூத்துக்குடி வந்தார். கோர்ட்டில் ஆஜரான பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
காவல்துறை அனுமதியோடு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால் காவல்துறை தற்போது எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. தற்போது ஆலை நிர்வாகம் ஆலையை திறக்க முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. எந்த நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.
அரசு ஊழியர்கள் போராட்டத்தை அரசு மிரட்டி ஒடுக்கி உள்ளது. இது தவறானது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
பா.ஜனதாவை எதிர்த்து வலுவான கூட்டணி உருவாகி உள்ளது. தமிழகத்திலும் வலுவான கூட்டணி அமையும். பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.