திண்டுக்கல், பழனி விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல் நிலையம் தொடக்கம்
திண்டுக்கல், பழனி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் வேளாண்மை மற்றும் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல், பழனியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. இங்கு உளுந்து கொள்முதல் நிலையம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மற்றும் பழனி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த உளுந்து வகைகளை நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம். இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கலந்துகொண்டு உளுந்து கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சாகுபடியாகும் பயறு வகைகளுக்கு, அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்றும், இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என அரசுக்கு புகார் வந்தது. இதையடுத்து பயறு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள் முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல் நிலையங்கள் இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை இந்த கொள்முதல் நிலையம் செயல்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உளுந்து சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த உளுந்து வகைகளை விற்பனை செய்யலாம். ஒரு கிலோ உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.56 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது அடங்கலில் சாகுபடி பரப்பினை பதிவு செய்ய வேண்டும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களோடு உளுந்து கொள்முதல் நிலையங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் வேளாண் அலுவலரை 9940925095, பழனி வேளாண் அலுவலரை 9791455187 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், விற்பனைக்குழு செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.