மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது
மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
கடலூர்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதையொட்டி செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள 10 அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்களில் மட்டும் செய்முறை தேர்வு நடைபெற்றது. காலை முதல் மாலைவரை நடைபெற்ற இந்த தேர்வை 900 மாணவ-மாணவிகள் எழுதினர்.
மீதமுள்ள மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை மொத்தம் 30 ஆயிரத்து 630 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு வருகிற 12-ந் தேதி முடிவடைகிறது.
முன்னதாக பிளஸ்-2 செய்முறை தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு முதன்மைக் கல்வி அதிகாரி பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர் செய்முறை தேர்வை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் மாணவர்களிடையே எந்த விதமான குழப்பமும் அச்சமும் இருக்கக் கூடாது என தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்முறை தேர்வுக்காக புறத்தேர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ள 983 ஆசிரியர்களுக்கு நியமன ஆணைகளை முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார். இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் செல்வராசு திருமுருகன் செல்வகுமார் சுவாமி முத்தழகன் முதன்மைக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகன் மற்றும் 220 மேல் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முதல் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 10 பள்ளிகளில் மட்டும் செய்முறை தேர்வு இன்று(அதாவது நேற்று) தொடங்கி இருக்கிறது. மீதமுள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை(இன்று) செய்முறை தேர்வு தொடங்க இருப்பதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.