ஒட்டன்சத்திரம் அருகே பரப்பலாறு அணையை தூர்வார வனத்துறை அனுமதி
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணையை தூர்வார வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடி. அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கனஅடி ஆகும். இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 34 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும்் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.
இதுதவிர சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பரப்பலாறு அணை திகழ்கிறது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீன் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம் குளம், பெருமாள்குளம், சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய குளங்கள் நிரம்புகின்றன.
கடந்த 1974-ம் ஆண்டு பரப்பலாறு அணை திறக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அணை தூர்வாரப்படாததால் சராசரியாக 28 அடி வண்டல் மண் மற்றும் கழிவுகள் பரப்பலாறு அணையில் தேங்கியுள்ளது. இதனால் அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பரப்பலாறு அணைப்பகுதியில் குறைவாக பெய்ததால் அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. இந்தாண்டு பரப்பலாறு அணையில் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமான தண்ணீர் உள்ளது.
வருகிற அக்டோபர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இந்த ஆண்டு அணை தூர்வாரப்பட இருக்கிறது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அணை வனப்பகுதியில் உள்ளதால் மத்திய வனத்துறையினரின் அனுமதி பெற வேண்டும். அதன்படி தற்போது மத்திய வனத்துறையும் அணையை தூர்வாரி கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி அணையை தூர்வாரும் பணிக்கான ஏற்பாடுகளில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.