தாரமங்கலத்தில் நகை கடையில் ரூ.84 ஆயிரம் வெள்ளி கொலுசு திருட்டு 5 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு
தாரமங்கலத்தில் நகை கடையில் ரூ.84 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகளை திருடி சென்ற 5 பெண்களை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.;
தாரமங்கலம்,
தாரமங்கலம் பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது மனைவி ராதா (வயது 25). தேர்நிலையம் அருகில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை வழக்கம் போல் கடையில் இருந்தார். அப்போது நகை வாங்குவது போல் டிப்-டாப் உடை அணிந்து 5 பெண்கள் கடைக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் ஒவ்வொரு நகையாக வாங்கி பார்த்து அவற்றின் விலை என்ன? என்று கேட்டவாறு கடை உரிமையாளர் ராதாவின் கவனத்தை திசை திருப்பினர். பின்னர் அவர்கள் எந்த நகையும் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு கடையில் இருந்து வெளியேறி சென்று விட்டனர்.
பின்னர் கடையில் உள்ள வெள்ளி பொருட்களை ராதா சோதனை செய்தார். அப்போது வெள்ளி கொலுசுகள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. இவற்றின் மதிப்பு ரூ.84 ஆயிரம் ஆகும். இதையொட்டி அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டார்.
அப்போது டிப்-டாப் உடை அணிந்து வந்த 5 பெண்கள் வெள்ளி கொலுசுகளை திருடி சேலையில் மறைத்து வைப்பது பதிவாகி இருந்தது. இதையொட்டி ராதா மற்றும் சிலர் கொலுசுகளை திருடி சென்ற பெண்களை தாரமங்கலம் பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து ராதா தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளி கொலுசுகளை திருடி சென்ற 5 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.