கோடைக்காலத்திற்கு முன்னர் கிராமங்களில் சீரான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலம் கோடைக்காலத்திற்கு முன்னர் சீரான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Update: 2019-02-01 22:00 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களில் 1800–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் கிராம பஞ்சாயத்துக்கள் பஞ்சாயத்து செயலர்கள் நிர்வாகத்தில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு கூட உடனடியாக தீர்வு காண முடியாத நிலையில் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுக வேண்டிய நிலையில் உள்ளனர்.

பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டங்கள் கூட முறையாக நடத்தப்படாத நிலை உள்ளதால் கிராம மக்கள் தங்கள் பஞ்சாயத்தின் நிர்வாக நிலை குறித்து தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

இந்தநிலையில் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் பிரச்சினையே கிராம மக்களுக்கு பெரும் சிரமத்தை தரும் நிலை இருந்து வருகிறது. பல கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதார வளர்ச்சி, குடிநீர் பகிர்மான குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது போன்ற காரணங்களால் குடிநீர் வினியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலை உள்ளது.

குறிப்பாக அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் மாதக்கணக்கில் குடிநீர் வினியோகம் இல்லை என்ற புகார் கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது மனுக்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

தற்போது உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் மே மாதத்திற்கு பின்னர் தான் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், வரும் கோடைக்காலத்திற்கு முன்னர் அனைத்து கிராமங்களிலும் சீரான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவைப்படும் நிலை உள்ளது.

இதற்கு முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகம், உரிய அதிகாரிகள் மூலம் குடிநீர் பிரச்சினை உள்ள கிராமங்களை கண்டறிந்து அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். பல பஞ்சாயத்துக்களில் நிதி வசதி இல்லாத காரணத்தினால் தான் குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள நிலையில் தமிழக அரசு கோடைக்கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரூ.188 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான நிதி குறித்து மதிப்பீடு செய்து அரசிடம் இருந்து ஒதுக்கீடு பெற வேண்டியது அவசியம் ஆகும்.

இதே போன்று நகர் பகுதிகளிலும், கோடைக்கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை கணக்கிட்டு அரசிடம் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

எது எப்படி ஆயினும், கோடைக்காலத்திற்கு முன்னர் கிராமப்புறங்களில் சீரான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இல்லையேல் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதோடு, வரும் பாராளுமன்ற தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பு போன்ற போராட்டங்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்