திருச்செங்கோடு அருகே கார் டிரைவர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது
திருச்செங்கோடு அருகே கார் டிரைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40), கார் டிரைவர். கடந்த மாதம் 15-ந் தேதி இவர் காரில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் காரை வழிமறித்து சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதில் சிலரை திருச்செங்கோடு நகர போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், இந்த கொலைக்கு திருச்செங்கோடு ராஜலிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரவிக் குமார் (42) என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ரவிக்குமார் நேற்று திருச்செங்கோடு சூரியம்பாளையம் மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நிலம் வாங்கியதில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறில் சுரேஷ்குமாருக்கும், இவருக்கும் முன்விரோதம் இருந்ததையும், இதையடுத்து தற்போது கைதாகி சிறையில் உள்ள தாமு என்பவர் மூலம் மற்றவர்களையும் ஏற்பாடு செய்து சுரேஷ்குமாரை கொலை செய்ததையும், அதற்கு தான் மூளையாக செயல்பட்டதையும் ரவிக்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.