பல்லடம் அருகே டிரைவர் கல்லால் அடித்துக்கொலை

பல்லடம் அருகே பொக்லைன் டிரைவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-02-01 22:15 GMT

பல்லடம்,

திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரு கல்குவாரியில் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தவர் பத்திரகாளி (வயது 40). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பச்சையாறு ஆகும்.

இவரது மனைவி குப்பத்தாள் (வயது 30), மகன் பிறைசூடன் (4) ஆகியோர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சங்கரண்டபாளையத்தில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 வருடமாக பத்திரகாளி மட்டும் காரணம்பேட்டையில் தங்கி இருந்து வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணி அளவில் காரணம்பேட்டை–கோடாங்கிபாளையம் அருகே ஒரு பாக்கியராஜ் (30) என்பவர் நடத்தி வரும் மீன்வறுவல் கடையில் வறுத்த மீனை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது வறுத்த மீன் கருகி இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பத்திரகாளி கடை உரிமையாளர் பாக்கியராஜிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாக்கியராஜ் கருங்கல்லால் பத்திரகாளியின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பத்திரகாளி நேற்றுமுன்தினம் இரவே கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பத்திரகாளி சிகிச்சை பலனின்றி நேற்றுகாலை பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து பத்திரகாளியின் மனைவி குப்பத்தாள்(30) பல்லடம் போலீஸ் நிலையத்தில் அளித்த அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்