இளநீர் வியாபாரத்துக்கு புதிதாக வாங்கிய ‘டிரைசைக்கிளை’ ஓட்டிச்சென்ற 2 பேர் பலி பஸ் மோதியதால் பரிதாபம்

புதிதாக வாங்கிய ‘டிரைசைக்கிளை’ ஓட்டிச் சென்ற இளநீர் வியாபாரி உள்பட 2 பேர், பஸ் மோதி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-01-31 23:09 GMT
மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த ராஜகம்பீரம் அருகே உள்ள திடீர் நகரை சேர்ந்தவர் சமயதுரை (வயது 54). இளநீர் வியாபாரி. அதே ஊரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (55). பிளம்பராக வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

சமயதுரை, ராஜகம்பீரம் பைபாஸ் ரோட்டின் ஓரத்தில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். தொழிலுக்காக டிரைசைக்கிள் வாங்க முடிவெடுத்தார். அதை தனது நண்பரிடம் கூறியதை தொடர்ந்து இருவரும் டிரைசைக்கிள் வாங்க மதுரைக்கு வந்தனர்.

அங்கு டிரைசைக்கிளை வாங்கிக் கொண்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். டிரைசைக்கிளை சமயதுரை ஓட்டிச் சென்றார். பின்னால் தங்கராஜ் அமர்ந்திருந்தார். துத்திக்குளம் என்ற இடத்தின் அருகே சென்ற போது, பின்னால் மதுரையில் இருந்து ராமேசுவரத்தை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.

அந்த பஸ், டிரைசைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தங்கராஜ், சமயதுரை ஆகியோர் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

பஸ் மோதியதில் டிரைசைக்கிளும் நொறுங்கியது. இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்