தானேயில் சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி 2 வாலிபர்கள் பலி
தானேயில் சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.;
தானே,
தானே டோம்பிவிலி மான்பாடாவை சேர்ந்த 6 பேர் நேற்று முன்தினம் இரவு கோட்பந்தர் ரோடு பகுதியில் நடந்த நண்பர் ஒருவரின் திருமண சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை கார் தானே பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
2 பேர் பலி
இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.மேலும் காரில் இருந்த அங்குஷ் சந்த்வடே (வயது30), அர்ஜூன் பார்டி (30) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் காபூர்பாவ்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.