கடனை திருப்பி கேட்டதால் நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்காக நண்பரை வெட்டி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-01-31 23:00 GMT
தாராபுரம், 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கல்லாபுரத்தை சேர்ந்தவர் சீனான் என்கிற மாரிமுத்து (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் ராமன் (43). இவரும் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் வேலையை முடித்துவிட்டு, இருவரும் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ராமன் தனது நண்பர் மாரிமுத்துவிடம் ரூ.5 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதன் பிறகு பல மாதங்கள் ஆகியும் ராமன் தான் வாங்கிய கடனை மாரிமுத்துவிடம் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 27.7.2016 அன்று இருவரும் சேர்ந்து டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறியதும், ராமனிடம் கொடுத்த ரூ.5 ஆயிரத்தை மாரிமுத்து திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது ராமன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் அதே இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கோபமடைந்த மாரிமுத்து, ராமனையும் அவருடைய மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதன் பிறகு இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அருகே இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

மாரிமுத்து சம்பவத்தன்று அவர் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று விட்டார். மாரிமுத்து திட்டியதை ராமனால் சகித்து கொள்ள முடியாமல் ஆத்திரம் ஏற்பட்டது. தன்னை அவமானப்படுத்திய மாரிமுத்துவை கொலை செய்ய ராமன் முடிவு செய்தார். வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்துக் கொண்டு, இரவு மாரிமுத்து இருக்கும் இடத்தை தேடி அலைந்துள்ளார். அப்போது மாரிமுத்து தனது புதுவீட்டில் தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்து, ராமன் அங்கு சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த கொலை குறித்து அமராவதி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் மாரிமுத்துவை கொலை செய்த குற்றத்திற்காக ராமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஆனந்தன் ஆஜரானார். 

மேலும் செய்திகள்