கூட்டணியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்ய காங்.-ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடத்த முடிவு

கூட்டணியில் ஏற்பட்டுள்ள அதிருப்திகளை சரிசெய்ய குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டு கூட்டத்தை சட்டசபை கூட்டத்தொடரின்போது நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-01-31 22:25 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.

அதிருப்தியை வெளிப்படுத்தினார்

குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். இந்த கூட்டணி அரசு அமைந்து 8 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மந்திரிகள் சிலர் கட்சி கூட்டங்களில் பேசும்போது, சித்தராமையா தான் எங்கள் முதல்-மந்திரி என்று சொல்கிறார்கள்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரசை சோ்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., தேவேகவுடா குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்தார். மேலும் குமாரசாமி சரியாக செயல்படவில்லை என்று பேசி அதிருப்தியை வெளிப் படுத்தினார்.

ராஜினாமா செய்வேன்

இதற்கு சற்று கோபமாக பதிலளித்த குமாரசாமி, காங்கிரசார் இதேபோல் தொடா்ந்து பேசினால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டணியில் குழப்பம் இருப்பது குமாரசாமி பேட்டி மூலம் பகிரங்கமானது.

இதையடுத்து எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., தான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கோரினார். இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா, குமாரசாமி ஆகியோர், சித்தராமையாவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

கூட்டணி குழப்பம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்ற சித்தராமையா, அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக கூட்டணி குழப்பம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். கூட்டணி ஆட்சிக்கு குந்தகம் வராத வகையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை கட்டுக்குள் வைக்கும்படி சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் இடையே நீடித்து வரும் அதிருப்தியை சரிசெய்யும் நோக்கத்தில், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டு கூட்டத்தை நடத்த கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கூட்டு கூட்டம்

வருகிற 6-ந் தேதி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரின்போது, இந்த இரு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் இரு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் இடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்