உப்பள்ளி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி கர்நாடகம் வருகை எடியூரப்பா பேட்டி
பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி கர்நாடகம் வருகிறார் என்றும், அவர் உப்பள்ளியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் என்றும் எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் குறித்து எங்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும், இதற்காக நிர்வாகிகள் இன்று முதலே கட்சியை பலப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கூறினேன்.
கர்நாடகம் வருகிறார்
மோடியை மீண்டும் பிரதமராக்குவதே எங்களின் குறிக்கோள். அதன் அடிப்படையில் நாங்கள் பணிகளை மேற்கொள்ள இருக்கிேறாம். பிரதமர் ேமாடி வருகிற 10-ந் தேதி கர்நாடகம் வருகிறார். உப்பள்ளியில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து மீண்டும் 19-ந் தேதி மோடி கர்நாடகம் வருகிறார். கட்சி கூட்டம் நடைபெறும் இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதே மாதத்தில் மேலும் ஒரு நாள் கர்நாடகம் வந்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அமித்ஷா வருகிறார்
அதே போல் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, வருகிற 14-ந் தேதி மற்றும் 21-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அவர் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ேமாடியின் 5 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு தெரிவிப்போம்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தகராறு நடைபெற்று வருகிறது. தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரசாரின் தொல்லையால் தன்னால் ஆட்சி நடத்த முடியவில்லை என்று குமாரசாமி பகிரங்கமாகவே கூறி இருக்கிறார். இந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாரபட்சம் பார்க்காமல்...
இந்த கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக உள்ளனர். வளர்ச்சி பணிகள் முடங்கிவிட்டன. நாங்கள் 20 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வறட்சியை ஆய்வு செய்தோம்.
விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த அரசு எந்த உதவியையும் செய்யவில்லை. வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு ரூ.949 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதையும் குமாரசாமி குறை கூறி இருக்கிறார். பிரதமர் ேமாடி, பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கி இருக்கிறார்.
குடிநீருக்கே பிரச்சினை
மாநிலத்தின் பல பகுதிகளில் குடிநீருக்கே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இன்னும் கோடை காலம் தொடங்கவில்லை. அடுத்த 4 மாதங்களில் குடிநீர் பஞ்சம் மேலும் அதிகரிக்கும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்த கூட்டணி அரசு இதுவரை செய்யவில்லை.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.