பட்ஜெட்டுக்கு முன்பாக முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வார் பா.ஜனதா மூத்த தலைவர் புட்டசாமி ஆரூடம்

பட்ஜெட்டுக்கு முன்பாக முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வார் என்று பா.ஜனதா மூத்த தலைவர் புட்டசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-31 22:02 GMT
பெங்களூரு,

பா.ஜனதா மூத்த தலைவர் புட்டசாமி, நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் கொடுப்பதற்காக மாநில அரசு ‘படவர பந்து’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுவரை யாருக்கும் வட்டியில்லா கடன் கொடுக்கப்படவில்லை. இந்த திட்டம் மக்கள் மத்தியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள மாநில அரசு ஏற்படுத்திய மாய வலை.

மத்திய அரசு ‘ஸ்மார்ட் சிட்டி’ (சீர்மிகு நகரம்) திட்டத்துக்காக கர்நாடகத்துக்கு ரூ.1,924 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மாநில அரசு சார்பில் இந்த திட்டத்துக்கு ரூ.176 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை நிர்வகிப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது.

குமாரசாமி ராஜினாமா

மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சி இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. கூட்டணி ஆட்சியில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி வருகிறார்.

இந்த கூட்டணி ஆட்சி பட்ஜெட்டுக்கு முன்பாக அதாவது வருகிற 8-ந்தேதிக்குள் கவிழ்ந்துவிடும். குமாரசாமி பட்ஜெட்டுக்கு முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்வார்.

மோடியை வீழ்த்துவதற்காக...

மத்தியில் நரேந்திரா மோடி 2-வது முறையாக பிரதமராவார். அவர் மீண்டும் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றி நன்கு வேலை செய்து வருகிறது. இதுவே பா.ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர உதவும்.

மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக தான் எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. நாட்டின் வளர்ச்சி, நல்லிணக்கத்துக்காக அவை கூட்டணி அமைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்