சத்தி அருகே பரிதாபம் மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை-மகன் சாவு சரக்கு வேன் மோதியது
சத்தியமங்கலம் அருகே சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே உள்ள பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43). லாரி டிரைவர். இவருடைய மனைவி மல்லிகா (41). இவர்களுக்கு மைதிலி (8) என்ற மகளும், பிரவீன்குமார் (6) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பாஸ்கர் தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் பாரதிநகரில் இருந்து சத்தியமங்கலம் வடபழனியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது சத்தியமங்கலம் அருகே உள்ள கள்ளுக்கடை பிரிவு பகுதியில் சென்ற போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த பாஸ்கர் மற்றும் அவருடைய மகன் பிரவீன்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி அந்த வழியாக வந்தவர்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த பாஸ்கர் மற்றும் பிரவீன்குமார் ஆகிய 2 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.