வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-01-31 23:00 GMT
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் தாலுகா, சிறுகமணி பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.புதுக்கோட்டையில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பட்டா வழங்க மனையை அளக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நிறுத்தப்பட்ட பணிகளை உடனே தொடங்கி அனைவருக்கும் பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ராஜலிங்கம், கவுரவ தலைவர் நடராஜன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வீரமுத்து, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களின் ஒவ்வொருவர் வீட்டிற்கும் வந்து உரிய விசாரணை நடத்தி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

முன்னதாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

மேலும் செய்திகள்